Sunday, October 2, 2011

கயிறே, என் கதை கேள்! சிசுவை சிதைப்பதுதான் விசாரணையா? முருகன் சொல்லும் கண்ணீர் கதை!- தொடர்-03

கயிறே, என் கதை கேள்! சிசுவை சிதைப்பதுதான் விசாரணையா? முருகன் சொல்லும் கண்ணீர் கதை!- தொடர்-03
[ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 01:13.09 AM GMT ]

கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம்.

மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்​கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது.

'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதை​களும் இருக்கு. மரியாதையா இப்பவே உன் வயித்தில வளர்ற குழந்தையைக் கலைச்சிடு. இல்லைன்னா, நாங்களே கலைச்சிடுவோம். அது இன்னும் மோசமா இருக்கும்!’ என அதிகாரிகள் மிரட்ட, நளினிக்கு குலைநடுங்கிவிட்டது. இதுபற்றி அவள் என்னிடம் கலந்து ஆலோசிக்கக்கூட வழி இல்லாத அளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகப்படுத்தினர்.

'உங்களோட அத்தனை சித்ரவதை​களையும் நாங்க பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிறதுக்குக் காரணமே, என் வயித்தில வளர்ற சிசுதான். நீங்க என்ன சொன்னாலும் அதைக் கலைக்க மாட்டேன்!’ என முடிந்த மட்டும் போராடி இருக்கிறாள் நளினி.

அடுத்த கட்டமாக இன்னொரு முயற்சியையும் அதிகாரிகள் நடத்திப் பார்த்தார்கள். என் மாமியார் பத்மா அவர்களையும், மைத்துனர் பாக்கியநாதனையும் மிரட்டி, 'குழந்தையை அழிக்கச் சொல்லுங்கள். இல்லையேல், நாங்கள் சொல்வதற்கு எல்லாம் ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள்!’ எனச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டரை மாத சிசுவைச் சிதைக்க அதிகாரிகளுக்கு என்ன ஒரு ஆர்வம்?

சிசுவை அழிக்க மட்டும் அல்ல... என்னையும் நளினியையும் கணவன் மனைவி இல்லை என்று போலியாக நிரூபிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். நாங்கள் சைதாப்பேட்டையில் கைதானபோது, நளினியின் கழுத்தில் தாலி இருந்தது. பெர்சனல் சர்ச் மெமோவில் (Ex.C.18 என்ற Personal Search memo) அந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் கஸ்டடியில், 'நாங்கள் இருவரும் கணவன் - மனைவி’ எனச் சொல்லி இருக்கிறோம். ஜுடீஷியல் கஸ்டடிக்கு வந்தவுடன், 'நாங்கள் இருவரும் கணவன் மனைவி’ எனக் குறிப்பிட்டு பல மனுக்களை சிறப்பு நீதிமன்றத்துக்கும், சிறை அதிகாரிகளுக்கும் பல்வேறு பரிகாரம் வேண்டி எழுதி உள்​ளோம். இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. அதிகாரிகள் என் மனைவிக்கு எதிராகத் தயார் செய்த ஆவணங்களான எக்ஸ்.பி. 75, 76, 77 (Ex.p.75, 76, 77) கன்ஃபெஷனல் ஸ்டேட்மென்ட் (Confessional statement), 78, 634, 1206, 1209, 1422, 1424, 1427, 1428 ஆகிய அனைத்திலும் என் மனைவியை மிஸ் நளினி என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். இது எத்தகைய குரூர வில்லத்தனம்?

எப்படியாவது என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிடலாம் என்று நம்பியே முன்ன​தாகவே ஆவணங்களில் நளினி கல்யாணம் ஆகாதவர்போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்த முயற்சியிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு கொலையை விசாரிக்க வேண்டியவர்கள், ஒரு சிசுவை அழிக்கவும், ஒரு குடும்பத்தைச் சீரழிக்கவும்தான் போராடினார்கள்.

அடுத்து, பத்திரிகையாளர்களிடம் அவர்கள் பந்திவைத்த செய்திதான் குரூரத்தின் உச்சம். 'முருகனும் நளினியும் திருமணம் செய்துகொள்ளாமலே உடல் உறவு வைத்துக்கொண்டவர்கள்’ என தாம்பத்​தியப் புனிதத்தைத் தலை முழுகும் கொடூரத்தைப் பரப்பினார்கள். என் மனைவியை வேறு சில ஆண்களுடன் தொடர்புபடுத்தியும் கொச்சைப் பரப்புதலில் குளிர் காய்ந்தார்கள். இவை குறித்​தெல்லாம் டிரையல் கோர்ட்டில் சி.ஆர்.பி.சி. செக்ஷன் 313-ன் கீழ் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் கண்ணீரோடு சொன்னோம். ஆனால், நிம்மதிக்காக ஏங்கிய எங்களின் குரல் நீதிமன்றத்தின் கம்பீரக் கதவைத் தட்ட முடியாமல் தோற்றுத் திரும்பின.

அடுத்தடுத்த நாட்களில் தினசரிகளைப் புரட்டி​னால், பக்கத்துக்குப் பக்கம் முருகனும் நளினியும்தான்... 'நளினியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குத் தகப்பன் யார்?’, 'புலிகளின் மூத்த தளபதிதான் நளினியின் காதலன்’ என நெஞ்சை நொறுக்கும் தலைப்புகள். எங்களுக்காக ஒரு குவளை நீர்கூட கொடுக்காத அதிகாரிகள் அந்த செய்திகளைத் தாங்கி வந்த தினசரிகளை வலிய வந்து கொடுத்தார்கள். அதைப் படித்துவிட்டு நாங்கள் துடித்த துடிப்பை ரசித்தார்கள். மனம் மரத்துப்போகிற அளவுக்கு அத்தனை அவதூறுகளையும் எழுதவைத்தார்கள். 'என்ன எழுதினாலும் சரி, நான் என் மனைவிக்கும், என் மனைவி எனக்கும் உண்மையாக இருக்கிறோம். இதை எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது!’ என நெஞ்சுக்குள் தைரியம் வார்த்துக்கிடந்தோம். அப்போதுதான் அவதூறின் அடுத்தக் கட்டத் தாக்குதல் மீடியாக்களில் ஆரம்பித்தது. 'நளினியின் குழந்தையைக் கொல்ல முருகன் முயற்சி’ எனத் தலைப்பிட்டு, உள்ளே நா கூசும் கற்பனைகளைக் கடைவிரித்தனர்.

எழுத்தால் - பிரம்பால் - அவ​தூறால் - ஆணவத்தால் எங்களை அழிக்க அதிகாரிகள் தீட்டிய அத்​தனை திட்டங்களையும் தவிப்போடு தாங்கிக்கொண்டோம். 'இனி அழக் கண்ணீர் இல்லை’ என்கிற நிலையிலும், 'இனி எம் மீது பாய்ச்ச அதிகாரிகள் எங்காவது போய் சித்ரவதைகளைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் உண்டு’ என்கிற சகலத்​தையும் கடந்த சலிப்பும் எங்களை உறுதிகொள்ள வைத்தது.

இத்தனை தடைகளைத் தாண்டி, நளினியின் வயிற்றில் ஆரித்ரா பிறந்தாள். சிறைக்குள் பிறந்தது அவள் எந்தப் பிறவியில் செய்த பாவமோ... ஆனால், எங்கள் வயிற்றில் அவள் பிறந்தது பெரும்பாவம். சிறையில் குழந்தை பிறந்தால், பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வது எமது சட்டரீதியான உரிமை. ஆனாலும், எமக்கு அது மறுக்கப்பட்டது. அதனால், ஆறு நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தோம். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, பட்டினிகிடப்பது எத்தகைய கொடூரம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பால் வற்றிப்போனது; ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போய் தண்ணீருக்காக ஏங்கத் தொடங்கியது. தாயும் மகளும் மடிகிற நிலையானால் சிக்கல் வந்துவிடுமே எனப் பயந்து என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுத்தார்கள். நாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன் இந்து திருமண சட்டப்படி செய்துகொண்ட திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்ய மறுத்த கதையும் நடந்தது. அதற்காக அடுத்தக் கட்ட உண்ணாவிரதம்!

பட்டினி கிடப்பதுதான் எமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் ஒரே ஆதாரமாக விளங்கியது. உடலை வருத்தி, உணவுக் குடலைச் சுருக்கி, நா வறண்டு, 'இதுதான் கடைசி நாளோ?’ எனக் கண்களுக்குள் பயம் படர்ந்து... மொத்தமாக 25 நாட்கள் உண்ணாவிரதம். சாகும் நிலை வரப்போகிறது எனத் தெரிந்த பிறகுதான், அதிகாரிகளின் மனதில் மாற்றம் பிறந்தது.

1995-ம் ஆண்டு எங்களுடைய திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்துகொண்டோம். 'குற்றவாளிகள் இல்லை’ எனப் போராடி இருக்க வேண்டிய நாங்கள், உண்மையான தம்பதி என்பதை நிரூபிக்கவும், எங்கள் மகளைக் காக்கவுமே படாத பாடுபட்​டோம்.

கருவிலேயே நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை கொடூரங்களையும் சந்தித்து​விட்ட என் மகள் ஆரித்ரா, இன்றைக்கு லண்டனில் பயோ மெடிக்கல் சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறாள். மிருகங்​களுக்கு மத்தியில் சிக்கிய சினை ஆடாக, வயிற்றுக்குள்வைத்து அவளை எப்படிப் பொத்திப்பொத்தி வளர்த்தோம் என்பதை இன்றைக்கு நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. வயிற்றுக்குள் இருந்தபோது மட்டும் அல்ல... வளர்ந்து ஆளாகி அவள் நிற்கும் வேளையிலும் 'மகளே...’ என வாய் நிறைய அழைக்க முடியாமலும், அவள் முகத்தைப் பார்க்க முடியாமலும் நாங்கள் படும்பாடு, ஆயிரம் தண்டனைகளுக்குச் சமம்!

எனக்கு தூக்குக்கான தேதி அறிவிக்கப்பட்டது குறித்து 'விகடன்’ நிருபர் ஆரித்ராவிடம் பேட்டி எடுத்தபோது, 'அப்பாவை முதல் முறையா சந்திச்சப்ப, 'ஏம்ப்பா இப்படிப் பண்ணினீங்க?’னு கேட்டேன். இன்னிக்குப் புரியுது... நான் கேட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு... அப்பா, என்னை மன்னிச்சிடுங்கப்பா’னு ஆரித்ரா பதில் சொல்லி இருந்தாள். ஒரு தாய், தகப்பனாக ஆரித்ராவுக்கு எதுவும் செய்ய முடியாமல், 'கொலைகாரனின் மகள்’ என்கிற பழிப் பெயரை வாங்கிக்கொடுத்த நாங்கள்தான் ஆரித்ராவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். எந்த சிசுவை அழிக்க நினைத்தார்களோ... அதுதான் இன்றைக்கு எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அவள் உலகத்தின் ஏதோ ஒரு திசையில் இருந்தாலும், எங்களின் வாரிசாக இருக்கிறாள் என்கிற ஆறுதலே எமக்குப் போதும்.

- காயங்கள் ஆறாது........

ஜூனியர் விகடன்

இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமைதிப்படையே !

இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமைதிப்படையே !

கடந்த செப்டம்பர் 19 நாளன்று , சேவ் தமிழ் இயக்கம் சார்பில், ”போர்குற்ற வரலாற்றில் இராஜீவும் ராஜபக்சேவும்” என்னும் தலைப்பில் ஒரு அரங்கக் கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது

சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் மணிவண்ணன்அவர்கள் பேசியது :
அதிபர் ஜெயவர்த்தனே என்னும் சிங்கள ராஜதந்திரியின் சதிவலையில் விழுந்த ராஜீவ், இந்திய பாராளுமன்றத்தின் தீர்மானமும், ஒப்புதலும் இல்லாமல் அடுத்த நாட்டின் பிரச்சினைக்கு தனது நாட்டு ராணுவத்தை அனுப்பினார்.இது இந்திய வெளியுறவுத்துறை செய்த மிகப்பெரிய தவறு.
ஆனால், இலங்கை சென்ற இரண்டு மாதங்களுக்குள்ளேயே இந்திய அமைதிப்படை தமிழர்களுக்கெதிரான தனது தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தமிழர்களுக்கெதிரான பல்முனைத்தாக்குதல் 87, 88, 89 என மூன்று
வருடங்கள் நடந்தது.

போரின் பின்பு யழ்ப்பாணம் சென்றிருந்த நான் 12 வயது சிறுமியிடம் பேசினேன்.”அண்ணா, சிங்கள ராணுவம் பற்றி எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்திய ராணுவம் வந்தவுடன் சுதந்திரம் (பாதுகாப்பு) கிடைத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்திய ராணுவமும் எங்களுக்கு கொடுமைகள் தான் புரிந்தது”என்றாள்.
இது இந்திய ஈழத்தமிழருக்கு செய்த சரித்திர துரோகம். ஈழத்தமிழருக்கு இந்தியாவுடன் பல்லாயிரமாண்டுகால உறவு உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வெளியுறவு கொள்கையை
இந்தியா இலங்கையில் கடைபிடிக்கவில்லை.

வடகிழக்கு, காஷ்மீர், மத்திய மலைவாழ் மக்கள் என எங்குமே இந்தியா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், தமிழகம் எப்படி அவர்களுக்காக போராடாமல் ஒதுங்கியது என்பதுதான் ஆச்சரியம்.
2009-ல் ஏற்பட்ட இழப்புக்கு 1987-ல் இந்தியா வித்திட்டது- 1987-ல் ஜெயவர்த்தனே ஜே.வி.பி. கூட்டத்தில் பேசினார். “நாம் செய்ய வேண்டியதை இந்திய ராணுவம் செய்யும்” என்று அவர் திட்டமிட்டு இந்தியாவையும், புலிகளையும் மோத வைத்தார்.

ஈழம் என்பது பல்லாயிரமாண்டு கால சரித்திர உண்மை. அது 1940-களுக்கு பிறகு சிங்கள இனவாதிகளின் அடக்குமுறையால் வலுப்பெற்றது. அந்த இன அடக்குமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது தீவிரவாதம் ஆகாது. ஆனால், அரசாங்கம் தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் நாம் நமது அகிம்சையான பேராட்டங்களை கூட விட்டு விட்டு ஒதுங்கினோம்.
இந்தியாவுக்கு எப்போதும் சிங்களரிடம் இருந்து பிரித்து தமிழர்களுக்கு உரிமை பெற்று தருவதில் விருப்பம் இல்லை. ஆனால், நமது எண்ணம் மாறுபட்டது. மனித உரிமைகள் எங்கு ஒடுக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அதுவும் ஒடுக்குவது இந்தியா எனும்போது நாம் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். நமக்கு அந்த உரிமையுண்டு.

2500 சிங்கள ராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தின் விடுதலைப்புலிகளின் முற்றுகைக்குள் சிக்கியபோது இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி சிங்கள ராணுவ வீரர்களை விடுவித்தது.அதே இந்தியாவிற்கு தங்களின் செயற்கைகோள் படங்களில் 3 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துகள்
இல்லாமல் தாக்கப்பட்டது தெரியாதா? ஏன் அவர்களை காப்பாற்ற இந்திய நடவடிக்கை எடுக்கவில்லை?

சேவ் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் “போர்குற்ற வரலாற்றில் இராசீவும் இராசபக்சேவும்” குறித்து இன்று பேசுவதற்கான காரணங்களை விளக்கினார்.

நான்காம் கட்ட ஈழப் போரில் சிங்களப் பேரினவாத அரசு புரிந்த இனக்கொலை குற்றத்திற்காக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்தோம். 2009 இலிருந்து இரண்டாண்டுகளைக் கடந்தும் ஆறாத காயங்களுடன், அடங்காத சினத்துடன் தமிழக அரசியல் வெளியைத் தமிழீழ ஆதரவு குரல் நிரப்பியிருந்தது. இனி இது ஈழத் தமிழர் பிரச்சனை அல்ல; இது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்குமான பிரச்சனை என்று வளர்ந்துக் கொண்டிருந்தது ஈழ ஆதரவு இயக்கம். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இனக்கொலை குறித்த விவாதம் நடப்பதற்குப் பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த சூழலில் தான் இந்திய அரசு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்கு தண்டனைக்கு நாள் குறித்தது. மூன்று தமிழர்களின் உயிரைப் பணையம் வைத்து இனக்கொலை விசாரணை கோருவதைவிட்டு தமிழகத்தை விலகச் செய்தது மட்டுமின்றி இராசீவ் கொலையை மீண்டும் தமிழக மக்களின் நினைவுக்கு கொண்டுவந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டி வெற்றி கண்டுள்ளது. மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு மூலையிலும் போர்குற்ற விசாரணை என்ற ஒன்று நிகழாது தடுத்து நிறுத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. 1971 வங்காளதேச விடுதலை அடைந்த போது நிகழ்ந்த போர்குற்றங்கள் ஆகட்டும், 1987களில் இந்திய அமைதிப்படை ஈழமண்ணில் நிகழ்த்திய போர்குற்றங்கள் ஆகட்டும்,தற்போது அண்மையில் காசுமீரில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 மனித புதைகுழிகள் குறித்த விசாரணை ஆகட்டும் இந்தியாவின் பங்கு குறித்த விசாரணை எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது. ஆக இலங்கையை காப்பாற்ற மட்டுமின்றி தன் சொந்த நலனுக்காகவும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு தேசிய இனத்திற்கு எதிராக நடந்து வரும் போர்குற்றங்கள் குறித்த விசாரணையை இல்லாது செய்து வருகிறது இந்தியா. இன்று தமிழக மக்களிடம் இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணை தேவை என்ற முழக்கங்கள் தீவிரமடைந்திருப்பதை நன்கு உணர்ந்த இந்தியா, மக்களை போர்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்பும் நோக்கோடு மூவரின் தூக்குதண்டனைக்கான நாள் குறித்தது.

போரை நிறுத்த கெஞ்சி நின்றது போல் மூன்று தமிழர் உயிர் காக்க மீண்டும் ஒரு முறை மன்றாடும் அரசியல் போக்குக்கு மாறினோம். மூன்று தமிழர் உயிரை மீட்பதென்பதைத் தமிழகம் தன்னுடைய மானப் பிரச்சனையாக உணர்ந்தது. இந்த முறை போராட்ட சுழற்சி வேகமாக நடந்தது. முதல் சுற்றின் இறுதியில் போராட்டம் செங்கொடி தீக்குளிப்போடு ஒரு உயிரைப் இழந்து நின்று கொண்டுள்ளது. மக்கள் போராட்டத்தின் ஒரு பயனாக தமிழக சட்டசபை ’தூக்கை நிறுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. உண்மையில் சட்டப் போராட்டத்தின் மூலம் தூக்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சிங்கள அரசுகள் அனைத்துலக அரங்கில் தங்களை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான அரச தந்திர கைவரிசைகளைக் கவலையின்றி செய்து கொண்டிருக்கின்றன. இரண்டாவது சுற்றுக்குள் நாம் நுழைகின்றோம்.

ஒன்றரை இலட்சம் உயிர்கள் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்டபின்பே தமிழக மக்கள் ’இராசீவ் கொலை’ என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து மீளத் துணிந்துள்ளனர். ஆனால் 2011 ல் நின்று கொண்டிருந்த நம்மை மீண்டும் 1991 க்கு தள்ளிவிட்டது இந்திய அரசு. மூன்று தமிழர் உயிர் என்றோம். பகைவர்கள் ’இராசீவோடு உயிரிழந்த 18 தமிழர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்று நம் பக்கமே திருப்பி விடுகின்றார்கள். நாம் அரசியல் நியாயமற்றவர்கள் போல சித்தரிக்கப்படுகின்றோம். ஆனால் அதுவா உண்மை?

இராசீவ் கொலை என்பது இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்க்கு எதிராக செய்த அட்டூழியங்களின் எதிர்வினையாகவே நடந்தது என்ற உண்மை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இராசபக்சேவை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்து தமிழீழ விடுதலைக்கு தடை போடத் தானே இந்திய அரசு நினைக்கின்றது. இராசபக்சே மட்டுமல்ல இராசீவ் காந்தியும் போர்க்குற்றவாளியே என்ற உண்மையைப் போட்டுடைப்போம். அது உண்மையில் மூன்று தமிழர் உயிர் காக்கும் மக்கள் போராட்டங்களை விரிவாக்கும். சிங்கள இராணுவம் இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது என்றால் இராசீவின் இந்திய இராணுவமும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. சிங்கள இராணுவத்தைப் போலவே இந்திய இராணுவமும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைக் கொடுமைகளை நிகழ்த்தியது. இராசபக்சே, வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களைக் கொல்ல சொன்னது போல் இராசீவும் சமாதானம் பேசப் போன பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார். ‘என் இராணுவம் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டது’ என்று இராசபக்சே சொன்னது போல் ‘இந்திய இராணுத்தினர் ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒற்றை கையால் கவனமாக சண்டைப் போடுகின்றன்ர்’ என்று இராசீவும் அன்று சொன்னார். இராசபக்சே போல இராசீவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைத்தார். ஈழத் தமிழர்தம் தமிழீழ தாயக வேட்கை உலகத் தமிழர்களின் தாகமாக மாறும் என்று இராசபக்சே கருதியிருக்க வில்லை. அது போல் அன்று புலிகளின் தாகம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் தாகமாக மாறி போராட்டம் புது வேகம் எடுக்கும் என்று இராசீவும் நினைக்க வில்லை.

எனவே, இராசீவும் இராசபக்சேவும் வரலாற்றின் அடுத்த அடுத்தப் பக்கங்களிலேயே நின்று கொண்டிருக்கின்றார்கள். இருபது ஆண்டுகளாக இருட்டடிக்கப்பட்ட உண்மைகளை ஊருக்கு உரக்க சொல்வதற்கு இது தான் தருணம். இதை நாம் முன்பே செய்திருக்க வேண்டும். இப்போதும் செய்யாமல் விட்டால் தான் அது பிழை. இன்று போர்க்குற்றங்கள் பற்றிய பரவலான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கின்றது. இப்போதாவது இந்திய அமைதி படையின் அட்டூழியங்களை அம்பலமாக்குவோம். நமக்கு வலியைக் கொடுக்க நினைக்கும் இந்திய அரசுக்கே வலியைத் திருப்பி தருவோம்.

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த இராசீவ் கொலை என்ற அரசியல் பிழையை திருத்தி எழுத நமக்கு இருக்கும் ஒற்றை வழி இராசீவின் பிம்பத்தைத் தகர்த்தெறிவதே. இராசீவ் போர்க்குற்றவாளி ! இராசபக்சே இனக்கொலையாளி!

தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் உரை :
இன்று ராஜபக்சே, நடத்திய இனப்படுகொலைகளுக்கு ‘முன்னோடி’ இந்திய ராணுவம் தான் என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதற்காக சில நிகழ்வுகளை மட்டும் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

‘சாட்சிகளற்ற இனப் படுகொலைகளை’ நடத்தியது சிறீலங்கா அரசு. அதற்காக முதலில் ஆட்சிக்கு எதிராக எழுதிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தான் இந்திய ராணுவமும் ஈழத்தில் நடத்தியது.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது; அதுமட்டுமல்ல அச்சு எந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர். அதே நாளில் கொக்குவில் என்ற இடத்திலிருந்த விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய ராணுவம் புகுந்து, ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது. ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள்; முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு, இந்திய ராணுவம் மக்களுக்கு எதிரான ராணுவ வேட்டையில் இறங்கியது. இதைத்தான் ராஜபக்சேவும், இறுதி கட்டப் போரில் செய்தார்.
• மருத்துவமனைகளை ராஜபக்சேயின் ராணுவம் குண்டு வீசித் தாக்கி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளையும் மறுத்த ரத்தக் கண்ணீர் வரவழைக்கும் அதிர்ச்சித் தகவல்களை இப்போது அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை கூறுகிறது. அதைத் தான் இந்திய ராணுவமும் செய்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய ராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987, நவம்பர் 7)


“அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். ராணுவத்தினர் உடனடியாக 50 நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன. அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் – ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை ராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல், அடையாளங்களை காண முடியில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள், அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன. மருத்துவ மனையில் மின்சாரத்தை ராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.

நெல்லிப்பாளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மணிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும், ராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் – ஷெல் வீசியது மட்டுமல்ல; எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது.

• சர்வதேச உதவி அமைப்புகளை போர்ப் பகுதியிலிருந்து ராஜபக்சே வெளியேற்றியதுகூட இந்தியா காட்டிய வழியில்தான்! இந்திய ராணுவம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள், இதைக் கண்டித்தன.

• ராணுவத் தாக்குதல் நடக்கும்போது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்ற ‘போர்க் குற்றத்தை’ இலங்கை ராணுவத்துக்கு கற்றுக் கொடுத்ததும் இந்திய ராணுவம் தான்.
“வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு, உணவு, மருந்து, பற்றாக்குறை கடுமையாகிவிட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய ராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும்” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்.

மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் என்றெல்லாம் அய்.நா. குற்றச்சாட்டுகளைக் கூறினாலும் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அணுகுமுறையை இலங்கைக்கு கற்றுக் கொடுத்ததும் இந்தியா தான்! இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா.வில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987, பிப்.1 மதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது; அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை!

• விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ, சமாதானப் பிரிவு பொறுப்பாளர் புலித்தேவன், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சிங்கள ராணுவம் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொன்றது நமக்குத் தெரியும். “வெள்ளைக் கொடியுடன் வந்தாலும் கவலைப்படாதே; சுட்டுத் தள்ளலாம்” என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய அமைதிப் படைதான். வெள்ளைக் கொடிகளை ரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய ராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய ராணுவம் நாவலாய் என்ற இடத்தில் காரை நோக்கி சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் – விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அய்.நா. பொதுச் செயலாளருக்கு 1987 நவம்பரில் எழுதிய கடிதத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி ‘வெள்ளைக் கொடி’யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சத் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு, அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சத் கூறினார். அப்போதும் அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரத் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

(Harkirat Singh : Once he (Dixit) said, shoot Prabaharan. I said, Sorry, I don’t do that. When he came to meet me at 120 Clock at night for some work, he said “shoot him. General, I have told you what I have (been) ordered”. I said, I don’t take your orders. And we are meeting under a white flag, you don’t shoot people under white flag”).

• ‘போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சுடலாம். ‘போர் நிறுத்தம்’ செய்யப்பட்ட காலத்திலும் மக்களை சுடலாம் என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய ராணுவம் தான்.

21.11.1987 அன்று இந்திய ராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அந்த 48 மணி நேரத்தில் திரிகோண மலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய ராணுவம் சுட்டது. இதில் இரண்டு பேர் பிணமானார்கள்.

• ராஜபக்சே – ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது.

ராஜீவ் காந்தி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான முரசொலி மாறனிடம், தரையை நோக்கி தனது காலைக் காட்டி இங்கு பிரபாகரன் தலை கொண்டுவரப்படும் வரை இந்திய ராணுவத்தின் இலங்கை தாக்குதல் தொடரும் என்று திமிருடன் கூறினார்

தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு அவர்கள் பேசியது :

ஐ.நா. சட்ட திட்டங்களின்படி இந்தியாவும், இலங்கையும் இனப்படுகொலை புரிந்துள்ளன. இனப்படுகொலை என்பது வெறும் எண்ணிக்கை சம்பந்தப்பட்டதல்ல, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு இனத்தவரை கொலை செய்தாலோ, அவர்கள் வாழ்வதற்கான சூழலை தடை செய்தாலோ அது இனப்படுகொலைதான்.

1987-ல் ராஜீவ் அனுப்பிய இந்திய அமைதிப்படை 8000 பேரை கொன்றது. சில ஆயிரம் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதென்றால் அவர்கள் சிங்களப்படைபோல் லட்சம் பேரை அழிக்கமாட்டார்கள் என்பதல்ல, அவர்கள் அதனைச் செய்ய விடாமல் புலிகள் தடுத்தனர்

ஆனால், இப்போது 2009-ல் உலக வல்லரசுகளின் ஆதரவும் மற்றும் ஆயுதங்களுடன், தீவிரவாதிகள் என்ற வாதத்தால் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ஈழத்தில் கொன்று குவித்தது சிங்களப்படை.

1991-ல் ராஜீவ் இறப்பினால் இழப்பு ஈழப்போராட்டத்திற்குதான் அதிக இழப்பு. இதைத்தான் அப்போதே கிட்டு கூறினார். “ராஜீவ் கொலை பற்றி உணர்வு ரீதியாக கவலை இல்லை.ஆனால் அரசியல் ரீதியான விளைவுகள் வலை
அளிக்கின்றன” என்றார். ராஜபட்ஷே மேற்கொண்ட போர் ராணுவ மயப்படுத்தலை மட்டுமே கொண்டது. அரசியல் ரீதியாக உலகை எதிர்கொள்ளும் வேலையை இலைங்கைக்காக இந்தியா செய்தது. போர் தொடங்கும் முன்பு இந்தியாவால் இந்தப் போருக்காக மூன்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

1. விடுதலைப்புலிகள் கை ஓங்கினால் இந்தியா தலையிடுவது
2. உலக நாடுகளிடையே எழும்பும் எதிர்ப்பை இந்தியா சமாளிப்பது
3. தமிழகத்தின் எழுச்சியை மடை மாற்றுவது

இந்த மூன்றாவது கோரிக்கையான தமிழகத்தின் எதிர்ப்பை கையாளுவதற்கு கருணாநிதி பயன்பட்டார்.ஆனால், முத்துகுமாரின் மரணம் மற்றும் தொடர் போராட்டங்களை இன்று ஈழத்தின் நியாயம் பரவலாக பேசப்படுகிறது. இதை நாம் 87 ஈழ படுகொலைகளின் போதே பேசியிருந்தால் இந்தியா தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இலங்கைக்கு இவ்வளவு உதவிகள் செய்து இருக்காது. 2009-ல் ஏற்பட்ட ஈழப் படுகொலைகளை அடுத்து தமிழகத்தின் எழுச்சியை அடக்கத்தான் இந்த மூவர் தூக்கு மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. நமது பேராட்ட முறைகளை எதிரியும் சேர்ந்தே தேர்வு செய்கிறான்.அவர்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ராஜீவ் பிணத்தை தோண்டி வந்து அரசியல் செய்கின்றனர். எனவே, நாம் ராஜீவ் ஈழ மக்களுக்கு செய்த கொடுமைகளை, துரோகத்தை அம்பலப்படுத்தி ராஜீவின் அரசியல் பிம்பத்தை வீழ்த்த வேண்டும்.

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது என்பது சிறீலங்கா அரசின் கற்பனையே - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது என்பது சிறீலங்கா அரசின் கற்பனையே - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சிறீலங்கா மீதான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்ற தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்கள் குறைவடைந்துள்ளன. எனினும் தம்மீதான நம்பிக்கைகளை தமிழ் மக்கள் இழந்துவிடாதவாறு மேற்குலகம் சில நடவடிக்கைகளைத் தக்கவைத்துள்ளது.

சிறீலங்கா அரச தலைவரின் நியூயோர்க் பயணத்தை அமெரிக்க அதிபர் புறக்கணித்ததும், சிறீலங்கா அரச தரப்பு எதிர்பார்க்காத தருணத்தில் சிறீலங்கா இராணுவத்தின் பிரதம போர்க்குற்றவாளியும், ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கும், மேற்குலக கூட்டணி நாடு ஒன்றின் ஊடாக சிறீலங்கா அரசு மீது தீர்மானத்தை கொண்டுவர எடுத்த முயற்சியையும் நாம் இங்கு குறிப்பிடலாம்.

ஐ.நாவிற்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியாக உள்ள ஒருவருக்கு அவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் நீதிமன்ற அழைப்பாணை செல்லுபடியற்றது. எனவே தம்மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் மிதந்த சிறீலங்கா அரச தரப்புக்கு அமெரிக்காவின் நீதிமன்ற விதிகளில் உள்ள நுட்பங்களை ஆய்வு செய்து. சவீந்திர சில்வாவின் தனிப்பட்ட வதிவிடத்திற்கு அழைப்பாணையை அனுப்பி, அதனை மத்திய கிழக்கை சேர்ந்த அல்ஜசீரா தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்திய தமிழர் தரப்பின் மதிநுட்பம் மிகவும் வியக்கத்தக்க விடயம்.

அதனைப்போலவே சிறீலங்கா இராணுவத்தின் 57 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஜேர்மனி, சுவிற்சலாந்து மற்றும் வத்திக்கானுக்கான து£துவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீண்டும் சுவிற்சலாந்து வந்தால் அவர் மீதான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுவிஸ் நீதி ஆணையாளர் அறிவித்துள்ளதும் சிறீலங்கா அரசுக்கு பலத்த அடியாகும்.

இரண்டாவது உலகப்போரின் போது சுவிற்சலாந்து மீது ஹிட்லர் தனது படைகளை ஏவவில்லை, ஏனெனில் போரில் வெற்றிபெற்ற பின்னர் தான் ஓய்வெடுக்கப்போகும் அழகிய தேசத்தை சிதைத்து அழித்துவிட அவர் விரும்பவில்லை. ஆனால் அன்று போர் நிறைவடைந்தபோது ஹிட்லர் ஓய்வெடுத்தது சுவிஸில் அல்ல கல்லறையில் தான். எனினும் முள்ளிவாய்க்காவில் 40,000 தமிழ் மக்களை, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என்ற வேறுபாடு இன்றி படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத்தின் போர்க்குற்றவாளிகளான படை அணிகளின் தளபதிகளை சிறீலங்கா அரசு திட்டமிட்டே சுவிஸ்இற்கும், நியூயோர்க்கிற்கும் ஓய்வெடுக்க அனுப்பியிருந்தது.

இது தமிழ் மக்களையும், சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்துவரும் மேற்குலகத்தையும் அவமதித்த செயலுமாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மாற்றமடைந்த உலக விதிகளை தனக்கு சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திய போதும், அதில் உள்ள சில நுட்பமான சரத்துக்களை தமிழர் தரப்பும் பயன்படுத்தி சிறீலங்கா அரசின் இனவாதத்தையும், இறுமாப்பையும் சிதறடித்துள்ளது.

ஐ.நாவின் 66 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்தும் சிறீலங்காவின் சர்வாதிகார அரசாட்சிக்கு அனுகூலமானதல்ல. வட ஆபிரிக்காவிலும், வளைகுடா நாடுகளிலும் தோற்றம் பெற்றுள்ள எழுச்சிகள் மற்றும் போராட்டங்கள் என்பன அங்கு ஆட்சியில் உள்ள கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு(Autocratic rulers) எதிரானது என அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் என்பதுடன், சிறீலங்காவில் ஜனநாயக விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அமெரிக்கா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் வலியுறுத்தி வருகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு மீது ஒரு தீ£மானம் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழுந்திருந்தன. ஆனால் சிறீலங்கா அரசின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என இந்தியா தெரிவித்த கருத்தை தொடர்ந்து சிறீலங்கா அரசு மீதான தீ£மானம் தற்போது நடைபெறும் 18 ஆவது கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் செப்ரம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் தமக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்பதை அறிந்துகொண்ட சிறீலங்கா அரசு, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நவம்பர் மாதம் சமாப்பிக்கப்படும் என்ற புரளியை கிளப்பி தனக்கு ஒரு கால அவகாசத்தை கேட்டிருந்தது. ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை சிறீலங்கா அரசு திட்டமிட்டு நவம்பர் மாதத்திற்கு பிற்போட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கு ஐ.நா செயலாளர் நாகயம் பான் கீ மூன் தனது நிபுணர் குழுவின் அறிக்கையை அனுப்பியதுடன், தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். வடஅமெரிக்க நாடு ஒன்றின் ஊடாக சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை முன்வைக்கும் பாவனையையும் மேற்குலகம் ஏற்படுத்தியிருந்தது.

கடந்த வியாழக்கிழமை (22) மதியம் ஒரு மணிக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அறிந்த சிறீலங்கா அரசு கொழும்பு திரும்பிய தனது அமைச்சர் மகிந்தா சமரசிங்காவை அவசரமாக மீண்டும் ஜெனீவாவுக்கு அனுப்பிய போதும், சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு காலஅவகாம் வழங்கும் நோக்கத்துடன் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதற்கு அப்பால் சிறீலங்கா அரசின் ராஜபக்ச கூட்டணி கடுமையாக மிரட்டப்பட்டுள்ளது என்பதும் உண்மையானது.

கொழும்பு வந்து சென்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கும் சிறீலங்கா அரசின் நவம்பர் மாதக் காலக்கெடுவை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியே சென்றுள்ளார். எனவே எதிர்வரும் நவம்பர் மாதமும், அடுத்துவரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரும் சிறீலங்கா அரசுக்கு அனுகூலமாக இருக்கமாட்டாது. அதனை உறுதிப்படுத்த வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் மக்களுக்கே உண்டு.

அனைத்துலக மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒருங்கிணையும் தமிழ் மக்களின் பலமும் அதற்கு வழியை ஏற்படுத்தும். இஸ்ரேல், பாலஸ்த்தீனம் என்ற இரு தேசங்கள் ஐ.நாவின் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்த்தீன அதிபர் மகமூட் அபாஸ் இன் கோரிக்கையும் தமிழர் தரப்புக்கு சில தகவல்களை எடுத்துரைத்துள்ளது.

63 வருடங்களாக பாலஸ்த்தீன மக்கள் சந்தித்த துன்பங்களும், இழப்புக்கள் போதும் என்ற அவரின் வாதம் ஐ.நா வட்டாரத்தை அனுதாபத்திற்குள் தள்ளியுள்ளது. 1967 ஆம் ஆண்டு காணப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகள் என்ற கொள்கைகள் செயற்படுத்தப்படும் என கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் தெரிவித்தபோதும், கடந்த வாரம் இடம்பெற்ற அவரின் பேச்சில் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக்கூடும் என்ற கணிப்புக்கள் எழுந்துள்ளபோதும், மத்தியகிழக்கில் அமைதியை உருவாக்குவதற்கு பாலஸ்தீன மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதே முதலாவது படியாகும் என்பதையும் அமெரிக்கா நன்கு அறியும்.

சோவியத்தின் உடைவு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் ஆட்சி மாற்றங்கள், ஈராக், ஆப்கானிஸ்த்தான் போர், லிபியாவில் து£க்கி எறியப்பட்டுள்ள கேணல் கடாபியின் ஆட்சி என்பன ஒன்றை உணர்த்தியுள்ளன. அதாவது எதிர்காலத்தில் இஸ்ரேல் என்ற நாட்டின் உதவி அமெரிக்காவுக்கு தேவையா என்பதே அதுவாகும். பசுபிக் பிராந்தியத்தில் இருந்து, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்துள்ள பூகோள அரசியலும் அதற்கு வலுச்சேர்த்துள்ளது.

விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம், தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது என்ற சிறீலங்கா அரசின் கற்பனைகள் எல்லாம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை சிறீலங்கா அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் தான் தங்கியுள்ளது. ஏனெனில் ஒரு நாட்டில் உள்நாட்டு போரை சில மணிநேரத்திற்குள் உருவாக்குவது எவ்வாறு என்பதற்கு லிபியா மீதான நேட்டோ படையின் தாக்குதல் மிகச்சிறந்த உதாரணம். எதிர்க்கட்சிகள் அற்ற நிலையில், எந்த ஒரு ஆயுதக்குழுக்களும் அற்ற நிலையில் 42 வருடங்களாக கடாபியின் ஆட்சியில் இருந்த லிபியாவில் சில மணி நேரத்திற்குள் ஒரு உள்நாட்டு போர் ஏற்படுமாக இருந்தால் சிறீலங்காவில் அதனை உருவாக்குவது மிகவும் சுலபமானது.

அதனை உணர்ந்துதானோ என்னவோ சிறீலங்கா அரசு வடக்கு கிழக்கில் தனது படை வளத்தை அதிகரித்து வருகின்றது. ஆனால் மூன்றாவது நாடு ஒன்றின் துணையுடன் மேற்கொள்ளும் படை நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலையில் சிறீலங்கா படைத்தரப்பு உள்ளதா என்பதே தற்போதைய கேள்வி. லிபியாவின் வான்படை மற்றும் பீரங்கிப்படைகள் முடக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற போரை தமிழர் தரப்பு நன்கு நினைவில் கொண்டுள்ளது. அம்பாந்தோட்டையை அடைமானம் வைத்து தமிழர்களின் தாயகப்பகுதிகளை சிறீலங்கா அரசு கைப்பற்றுவது சாத்தியமானதாக இருந்தால், திருமலை துறைமுகத்தையோ அல்லது காங்கேசன்துறை துறைமுகத்தையே அடைமானம் வைத்து இழந்த பகுதிகளை தமிழர் தரப்பு மீட்டுக்கொள்வதும் சாத்தியமானது ஒன்றே.

நன்றி: ஈழமுரசு மற்றும் புலத்தில்

மூவர்களின் மரணதண்டனையினை ரத்துசெய்யகோரி தமிழகம்எங்கும் உண்ணாவிரதபோராட்டம்

Oct 3, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

மூவர்களின் மரணதண்டனையினை ரத்துசெய்யகோரி தமிழகம்எங்கும் உண்ணாவிரதபோராட்டம்

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகிய 3 தமிழர்களின் உயிர்கள் காக்கப்பட வேண்டும் மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 02.10.2011 இன்று தமிழகம்எங்கும் தமிழ்உணர்வாளர்கள் மற்றும் அமைப்பினரால் உண்ணாவிரதபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் உலகத்தமிழர் இயக்கதலைவர் பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதத்தினை மா.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தொடக்கிவைத்தான் மகாத்மா காந்திஅடிகளின் பிறந்த நாளான இன்று உண்ணாவிரதத்தினை தொடக்கிவைத்து கருத்துரைத்த வைகோ.


137 நாடுகளில் தூக்கு தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. ''தூக்கு தண்டனை என்பது திட்டமிட்டு கொலை செய்வதற்கு சமம்'' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யரே தெரிவித்துள்ளார். ''பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் கூடாது'' என்று காந்தியடிகள் சொல்லியுள்ளார். ஆகவே தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும்.ஒரு உயிருக்காக பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு என்ன பதில். இந்த மூன்று தமிழர்களுக்கு அந்த சம்பவத்தில் சம்பந்தமே கிடையாது என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.


ஆனால் இந்த மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால் நாங்கள் தெருத் தெருவாக சென்று ராஜீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கிறோம். தூக்கு கயிறை அறுத்தெறிவோம் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. தூக்கு தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SINGALA KAADAIGAL

ஈழத்தின் இருதய பூமியில் நடந்த நில அபகரிப்பு

ஈழத்து நிலத்தில் இன்னொரு சிங்களக் குடியேற்ற அராஜகம் நடந்து விட்டது. எதற்காக ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதன்மீது தொடர்ந்தும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை செய்து கொண்டேயிருக்கிறது

ஈழத்து மண்ணில் நில அபகரிப்பினால் எழும் ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு சாதாரணமானது கிடையாது. ஈழப் போராட்டம் என்பது நிலத்திற்கான போராட்டம். எந்த நிலத்திற்காக ஈழத் தமிழினம் போராடியதோ அந்த நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் செய்வதில்தான் இலங்கை அரசின் கவனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழும் நிலத்தை ஆக்கிரமித்து அந்நியக் குடிகளை குடியேற்றம் செய்வது என்ன நியாயம்? ஈழத் தமிழர்களின் நெஞ்சில் அடித்து வதைக்கும் நிகழ்வாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதே ஆக்கிரமிப்புப் புத்தியில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றத்தை செய்திருக்கிறது.

ஈழத்தின் இருதய பூமியாக முக்கியம் பெறுகிறது கொக்கிளாய் நிலம். கொக்கிளாய் என்ற பிரதேசம் வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசம். ஈழத்தின் வடக்கில் முல்லைத்தீவிலிருந்து ஈழத்தின் கிழக்கு நோக்கிய திசையில் முடிவிடமாகி கிழக்கில புல்மோட்டையுடன் கொக்கிளாய் இணைகிறது. இருதயத்தை அபகரித்தலைப் போலவும் இருதயத்தை கொலை செய்தலைப் போலவும் பெரும் ஆக்கிரமிப்பு அரசியல் நோக்கோடு சிங்களக் குடியேற்றத்தை இலங்கை அரசு செய்திருக்கிறது. ஒற்றை ஆட்சி என்ற பெயராலும் மனிதாபிமான இலங்கை என்ற பெயராலும் நடத்தப்படும் இந்த அநீதிகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
கொக்கிளாயில் 1983இல் அதாவது ஈழப் போராட்டம் வெடித்த கால கட்டத்தில் தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். மூன்று மணிநேர அவகாசம் கால கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதை வெளியேற்றப்பட்டார்கள் என்பதைவிட துரத்தியடிக்கப்பட்டார்கள் என்றே கொக்கிளாய் மக்கள் குறிப்பிடுகிறார்கள். அன்று துரத்தியடிக்கப்பட்ட மக்களில் பலர் இடம்பெயர்ந்து புலம்பெயர்ந்து இன்னும் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்பாமல் தவிக்கின்றார்கள். 28 ஆண்டுகளுக்கு பின்னர் கொக்கிளாய் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள் என்று ஊடகங்களில் பிரகடனம் செய்து கொண்டு விழாக்களை நடத்திய அரச தரப்பினர் பெரும் சாதனையாக அந்த மீள்குடியேற்றத்தை நடத்தினார்கள். 28 ஆண்டுகளாக அழிக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டு ஏதுவுமற்றிருக்கிற அந்த நிலப்பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் மீளக் குடியிருத்தப்பட்டார்கள்.
கொக்கிளாய் இராணுவத்தினரால் ஏன் மூடி வைக்கப்பட்டிருக்கிறது அல்லது முழுமையாக ஏன் முற்றுகையிடப்பட்டிருக்கிறது என்பது இப்பொழுது தெளிவாக தெரிய வந்திருக்கிறது. 28 ஆண்டுகளின் பின்னர் மீள்குடியேற்றம் என்ற பிரகடனத்துடன் மக்கள் ஏன் அங்கு கொண்டு செல்லப்பட்டு மணல் வெளிகளில் காடுகளில் விடப்பட்டார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 28 ஆண்டுகளின் பின்னர் தங்கள் கிராமத்தில் வாழ நுழைந்த மக்கள் பார்த்த அதிர்ச்சி முகத்துவாரம்தான். முகத்துவாரத்தின் முழு அதிகாரமும் சிங்கள மக்களிடத்தில் வழங்கப்பட்டிருந்தது. அங்கு 300 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன. காலம் காலமாக வாழ்ந்து வந்த தங்கள் நிலத்தில் அதன் வளங்களைச் சுறண்டிக் கொண்டு சிங்கள மக்கள் அத்துமீறிய குடியேற்றம் செய்யப்பட்டு வாழ்வதைப் பார்த்த தமிழர்கள் குமுறினார்கள்.
கொக்கிளாய் மற்றும் கொக்குத் தொடுவாய் பிரதேசத்தில் சிங்கள மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாகவும் அங்குள்ள தமிழர்களின் தொழில் புலங்களில் அவர்களுக்கு அதிக உரிமைகளை பகிர்ந்தளித்து கொடுக்க இருப்பதாகவும் மக்களின் காதுகளுக்கு எட்டிய கதைகள் அவர்களை பெரும் அதிர்ச்சக்கு உள்ளாக்கியது. சிங்களவர்கள் ஒரு கோயிலைக் கூட விடுகிறார்களில்லை என்று தனது நிலத்தைப் பிரிந்து 28 ஆண்டுகளின் பின்னர் மீள வந்திருந்த மேரி லூசியா என்ற இளம் பெண் தெரிவித்தார். காலம் காமாக அவர்கள் வணங்கி வந்த கிறிஸ்த ஆலயத்தைகூட இன்று சிங்களவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். ஒரு சிறுமியாக அந்தக் கிராமத்தைவிட்டுப் பெயர்ந்த மேரிலூசியா இன்று இடம்பெயர்ந்த காலத்தில் தனது தந்தைiயும் இழந்து தனியே தனது பூர்வீக நிலத்திற்கு மீள வந்திருக்கிறார்.
தங்களின் மீன்பிடி உரிமை முழுமையாக சிங்களவர்களிடத்தில் கொடுக்பட்டுள்ளதாக மேரிலூசியா தெரிவித்தார். தனது தந்தை காலம் காலமாக தொழில் செய்து வந்த கரையை இப்பொழுது சிங்களவர்கள் கைப்பற்றி தொழில் செய்வதுடன் அந்தக் கரை தமக்குச் சொந்தமானது என்றும் சொல்லுகிறார்கள். இந்த விடயம் பற்றி பிபிசி ஒரு செய்தியை ஒலிபரப்பியிருந்தது. தமிழர்களின் மீன்பிடி உரிமை தொடர்பில் கேட்கப்பட்ட பொழுது அங்கு சிங்களவர்களும் முப்பது வருடங்களாக மீன்பிடிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கும் உரிமை இருக்கிறது என்றும் அவர்களுக்கும் தொழில் புலம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
இப்படியெனில் அன்று கொக்கிளாயில் இருந்து இதற்காகவா ஈழத் தமிழ் மக்கள் துரத்தப்பட்டார்கள்? ஈழத் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலங்களிலிருந்து அவர்களைத் துரத்தியடித்துவிட்டு அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றியது இந்த சட்டதிட்டத்தை பேசுவதற்காகவா? இதுதான் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை நெருக்குகிறது. இந்த அணுகுமுறைதான் ஈழத் தமிழர்களைப் போராடத் தூண்டியது. ஈழத்து நிலத்தை முழுமையாக கொள்ளையடிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இலங்கை அரசிடம் கிடையாது. இந்த அரசியல் புத்தி ஊட்டப்பட்ட படைகள் அதற்கு ஏற்ப செயற்படுகின்றனர். இந்த அரசியலை முன்னெடுக்கும் அமைச்சர்களும் அரச எம்.பிக்களும் எப்பொழுதும் இதையே கூட்டாக முன்னெடுக்கின்றனர். காலமும் அரசும் மாறிய பொழுதும் இந்த ஆக்கரமிப்பு கொள்கை மாறாது தொடருகிறது.
அண்மையில் கொக்கிளாயில் 44 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே 37 குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இதுவரையில் 82 குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. 300 குடும்பங்களுக்கு காணிகளைப் பகிர்நதளிப்பேன் என்ற சத்தியப் பிரமாணத்தை செய்த உதவி அரசாங்க அதிபர் ஒருவர் தொடர்ந்தும் எப்படிக் காணிகளைப் பகிர்ந்தளிப்பது என்று சிங்களக் குடியேற்றத்திற்கு விசுவாசமாகத் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சிங்கள மக்கள் காணிகள் அற்ற மக்களா? அல்லது இந்தப் பிரதேசத்தின் பூர்வீகக் குடிகளா? ஏன் இந்த மக்கள் ஈழத் தமிழர்களின் நிலத்தில் வந்து குடியேற வேண்டும்? இவர்கள் நிலமற்ற மக்களா? அப்பாவி சிங்கள மக்கள் புத்திச் சலவை செய்யப்பட்டு பலியாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மக்களும் சிங்களப் பேரினவாத அரசின் அரசியலுக்காக – அதிகாரத்திற்காக பலியாக்கப்பட்;டுள்ளார்கள். ஈழத் தமிழர்களுக்கு என்று தனித்துவமான நிலம் இருக்க் கூடாது என்றும் அப்படித் தனித்துவமா நிலம் இருந்தால் தமிழர்களிடத்தல் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்கள் சென்றடைந்துவிடும் என்றும் ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமையை தொடர்ந்தும் கேட்பார்கள். அதற்கு குரல் கொடுக்க அவர்களுக்கு பிரதிகள் உருவாகுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்றும் தனித்துவமான மொழி பண்பாட்டு அடையாளங்கள் கொண்ட வாழ்வை வாழும் ஈழத் தமிழர்களின் சந்ததிகள் ஈழ நிலத்தில் தொடரக் கூடாது என்று இன அழிப்புத் திட்டத்தைக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டு வெற்றி கொண்டாடிய அதே ஆக்கரமிப்பு இன அழிப்பு அரசியலே இந்தக் குடியேற்றங்களையும் தமிழர் நிலத்தில் திணிக்கிறது.
மணலாறு என்ற வடக்கு கிழக்கின் இருதய பூமியை வெலி ஓயா என்று பெயரை மாற்றிச் சூட்டி நிலத்தையும் அதன் அதிகாரத்தையும் அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை செய்து தமிழர்களற்ற கிராமங்களாக்கியிருக்கிறார்கள். தமிழர்கள் மணலாறு என்ற பூர்வீக நிலத்தை இழந்திருந்த அதிர்ச்சி நிலையில் இப்பொழுது கொக்கிளாயை இழக்கிறார்கள். அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களில் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்து எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்களப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. கொக்கிளாயில் .அரசால் வெலிஓயா என்ற பிரதேச செயலக பிரிவை புதிதாக உருவாக்கப்படுகிறது. ஆந்த பிரதேச செயலக பிரிவில் 8 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. அவற்றில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்கேணி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன. இதில் உள்ளடங்கும் தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு இந்தப் பிரதேச செயலாளர் உருவாக்கப்படுகிறது. கொக்கிளாயில் குடியேறிய சிங்கள மக்களின் பதிவுகள் திருகோணமலை கண்ணியா அரச அதிபர் பிரிவில் அடக்கப்பட்டது. இப்பொழுது சிங்கள மக்களுக்காக சிஙகள பேரினவாத அதிகாரத்தைக் கொண்ட உதவி அரச அதிபர் பிரிவு உருவாக்கப்பட இருக்கிறது.
கொக்கிளாயின் அபகரிப்பு என்பது மிகவும் அபாயகரமானது. ஈழத் தமிழ் இனத்தின் இருப்பையும் வடக்கு கிழக்கு இணநை;த தமிழர் தாயகத்தின் எதிர்கால அரசியலையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையை சிதைக்க பேரினவாத அரசியல் பெரும் பொறியாக கொக்கிளாயில் புதைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொறி பெரும் அபாயரமாக ஒருநாள் வெடிக்கப் போகிறது. ஈழத்து நிலத்தை சிதைக்கப் போகிறது. தொடர்ந்தும் இந்த ஆக்கிரமிப்பை தமிழர் தாயகம் எங்கும் பேரினவாத அரசு செய்ய திட்டமிட்டு வருகிறது. நாம் இழக்க முடியாத இருதயத்தைப் போல கொக்கிளாயின் அபாய நிலை ஈழத் தமிழினத்தின் மூச்சை தாக்குகிறது. ஈழத் தமிழர்களின் முழுவாழ்வையும் இந்தக் குடியேற்றம் பாலியாக்கும் திட்டம் கொண்டது.
இன்னும் திருந்தாத அரசிடம் இனி எந்த அணுகுமுறைகளைக் காட்டுவது? பேசுவதற்கும் பேசித் தீர்ப்பதற்கும் என்ன இருக்கிறது? இந்த நாட்டில் சிங்கள மக்கள் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு எங்கும் குடியேறலாம் என்றும் அவர்களின் என்ன செயற்பாட்டை எங்கும் நிகழ்த்தலாம் என்றும் ஊக்குவிக்கப்படும் பொழுது ஈழத் தமிழர்கள் என்ன வெளிப்பாடுகளைக் காட்ட வேண்டும்? இந்த நாட்டில் ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் விடுதலையை எப்படி மீட்பது? இந்த நாட்டில் நிலத்திற்காகப் போராடும் ஈழத்து மக்கள் என்ன செய்வது? எல்லா அணுகுமுறைகளும் எல்லாத் தியாகங்களும் வெளிக்காட்டிப் போராடிய ஈழத் தமிழினம் இன்று இப்படித்தான் பல வகையில் அழிக்கப்படுகிறது. பல வகையில் ஒடுக்கப்டுகிறது. பல வகையில் நிலத்திலிருந்து பிடுங்கப்படுகிறார்கள். கொடிய அரசியலை எதிர்கொள்ளுகிறார்கள்.
1960களில் கொக்கிளாயில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று சிங்களக் குடியேற்றத்திற்கு விசுவாசமான உதவி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். சிங்களக்குடியேற்றத்திற்கு எந்தக் காரணத்தையாவது சொல்லி குடியேற்றத்தை செய்து முடித்து தனது பதவி பெற்றலுக்கான நன்றியுணர்வை காட்ட வேண்டும் என்று அவர் இப்படி வரலாறு பேசுகிறார். இது எத்தகைய கொடியது? ஒட்டுமொத்த இனத்திற்கும் இழைக்கும் துரோகமே. இந்த அத்துமீறிய குடியேற்றத்தை விரும்பாத அந்த நிலத்தின் பூர்வீகத் தமிழ் மக்கள் முற்கூட்டியே அவரது நடத்தையை குறித்து குறிப்பிட்டிருந்தார்கள். சிங்களக் குடியேற்றம் செய்வேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு பதவியைப் பெற்று வந்து மீள்குடியேறிய மக்களுக்கு எந்த அடிப்படை வசிதிகளையும் செய்து கொடுக்காமல் காலத்தை இழுத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றத்திற்காக பல வகையிலும் இயங்கியிருக்கிறார். தனது பதவிக்காக தாய் நிலத்தையே இந்த அதிகாரி விற்றிருக்கிறார். தனக்காக இந்த நிலத்தில் பல்லாயிரம் மக்களைக் கொன்றிருக்கிறார். இது எத்தகைய கொடுமை? இன்று சிங்களப் பேரினவாத அரசினது கொக்கிளாய் சிங்களக் குடியேற்றதர்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறர்ர.
கொக்கிளாய் என்ற ஈழத்து நிலப் பிரதேசத்தில் சிங்கள மக்கள் எப்படி வந்தார்கள்? தெற்கில் வசதி வாய்ப்புக்களுடன் சொத்துச் சுகங்களுடன் வாழ்ந்து வந்த மக்கள் 1983இல் ஈழத் தமிழர்கள் அங்கு வெளியேற்றப்பட்டதோடு அது முழுமையான இராணுவக் கட்டுப்பாடு ஆகிய பொழுது கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள். கடந்த 28 வருடங்களாக இராணுவத்தினரால் மூடுண்ட கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்தது. கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் 1990களில் தாக்கிய பொழுதும் அவர்கள் முகத்துவாரத்தை நெருங்கவில்லை. கொக்கிளாய் முகத்துவாரத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.
கொக்கிளாய் வளமான நிலப்பகுதி. விவசாய நிலமும், மீன்பிடி ஆறும், நிறைந்த குளமும் எல்லாவற்றையும்விட மீன்பிடி வளம் நிறைந்த கடல் பிரதேசத்தையும் கொண்டது. இந்த நிலத்தை 1983இலேயே சிங்கள இராணுவத்தினர் குறிவைத்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட அன்றைய கால கட்டத்திலேயே சிங்கள மக்கள் குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கப்பட்டு குடியேற்றப்பட்டனர். மீன் பிடியின் மூலம் சொத்துக்களை சேர்க்கலாம் என்று ஊட்டப்பட்ட புத்தியின் அடிப்படையில் தெற்கிலிருந்து பல சிங்களவர்கள் குடும்பமாக வந்து குடிNறி அங்கு தொழிலில் ஈடுபட்டு வளங்களை அள்ளிச் செல்லத் தொடங்கினார்கள். இன்றுவரை எந்த தடங்கலுமின்றி அவரகள் கொக்கிளாயின் வளங்களை அள்ளிச் செல்லுகிறார்கள். இப்பொழுது எல்லா குறிக் கோள்களுடனும் நிரந்தரமாக காணிகள் வழங்கப்பட்டு கொக்கிளாய் பிரதேச மக்களாக அவர்கள் பதிவு செய்யப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளாதர்கள். தமிழ் மக்களின் வளங்களை நிரந்தரமாக கொள்ளையடிக்க இடமளிக்கப்படுகிறார்கள்
சிங்கள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர். முகத்துவாரத்தில் அவர்கள் வணங்கி வழிபாட்டில் ஈடுபட புத்தர் கோயில் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 15 சிங்கள மாணவர்களுக்காக நான்கு இரட்டை மாடிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மின்சார வசதி போக்குவரத்து வசதி என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளன. புல்மோட்டை வழியாக தெற்கிற்குச் செல்ல தரை வழிப்பாதை இல்லாததினால் கடல் வழியாக சென்றுவர படகு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கடைகள், அலுவலகங்கள் என்பனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது கொக்கிளாயில் குடியேற்றப்பட்டுள்ள அந்த நிலத்தின் பூர்வீக தமிழ் மக்களின் நிலமை. காலம் காலமாக அந்த நிலத்தில் வாழந்து வந்த பூர்வீகத் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைப் புத்தியுடன் புறக்கணிக்கப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் தறப்பாள் கூடாரங்களில் வாழ்கிறார்கள். முல்லைத்தீவு நகரத்திற்கு செல்ல போக்குவரத்து வசதிகள் ஏதுமின்றி வரும் ஒரு சில பேரூந்துகளை நம்பியிருக்கிறார்கள். சுமார் 100 மாணவர்கள் படிக்கிற கொக்கிளாய் பாடசாலை ஒரோ ஒரு ஓலையால் அமைக்கப்பட்ட தற்காலிக கட்டிடத்தில் இயங்குகிறது. வீதிகள் திருத்தப்படாமல் மணலும் பற்றையுமாக இருக்கிறது. தொழிலுக்கு அனுமதிக்கப்படாமல் தொழில் செய்ய கருவிகள் எதுவுமில்லாமல் அந்த மக்கள் கவனிக்கப்படாதிருக்கிறார்கள்.
கொக்கிளாய் நிலத்தில் நிலம் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் அந்த நிலத்தின் பூர்வீக மக்களாக வரலாற்றில் எழுதப்பட்டுள்ளார்கள். இது ஒட்டுமொத்த ஈழத் தமிழ் இனத்தின் சந்ததிகளையும் அபாயம் மிக்க எதிர்காலத்திற்கு முகம் கொடுக்க வைக்கப் போகிறது. தனிநாட்டிற்காக போராடி அளப்பெரிய தியாகங்களைச் செய்து விடுதலை கேட்டு நின்ற இனத்தின்மீது மாபெரும் அழிப்பை நடத்தி ஒரு சில ஆண்டுகளிலேயே இப்படிச் சிங்களக் குடியேற்றங்களை செய்யும் சிங்களப் பேரினவாத அரசு இந்தக் குடியேற்றங்களையும் ஆக்கரமிப்புக்களையும் செய்து புதுக்கதைகளை எழுதுகிறது என்றால் எதிர்காலத்தில் இவை எப்படி விளையப் போகின்றன? என்றும் அதனால் எங்கள் சந்ததி எப்படி தவிக்கப் போகிறது என்றுமே பெரும் அச்சம் எழுகிறது.
கொக்கிளாயில் நடந்தது வெறும் நில அபகரிப்பு அல்ல. ஈழத் தமிழ் இனத்தை நிலத்திலிருந்து துடைத்தெறியும் இன அழிப்பு. உரிமைகளை பறிக்கும் அரசியல் நடவடிக்கை. ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டை அடையாளங்களை அழிக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை. ஈழத் தமிழர் வாழ்வை அழிக்க உரிமைகளைப் பறித்தெடுக்கும் தந்திரங்களைக் கொண்ட இனப்பெயர்த்தழிப்புத் திட்டம். இதை இந்தத் தலைமுறை எப்படிக் கையாளுகிறது என்பதில் ஈழத் தமிழ் இனத்தின் எதிர்காலமும் ஈழத் தமிழ் நிலத்தின் அடையாளமும் உரிமையும் தங்கியிருக்கிறது. ஏனெனில் கொக்கிளாய் நாம் இழந்து வாழ முடியாத நிலம். ஈழம் என்ற நிலத்தின் இருதயத்தை இழந்து நாம் எப்படி வாழ்வது? இந்த நில அபகரிப்பும் சிங்களப் பேரினவாத அரசியல் அதிகாரத் திணிப்பும் ஈழத்து நிலத்தில் இனஅழிப்பு மற்றும் உரிமை பறிப்பின் பொறியாக வைக்கப்படுகையில் இதுவே இன முரண்பாட்டினதும் ஈழத் தமிழ் இனம் எதிர்ப்போராட்டத்தை செய்ய தூண்டத்தக்க வகையில் பெரும் பொறியாகவும் விதைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்மாறன்-